தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிகராக பிரபலமானவர்தான் திருச்சி சரவணகுமார். இவர் மிமிக்ரி கலைஞராகவும் புகழ்பெற்றார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர் காந்தி கணக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல தொலைக்காட்சி சேனல்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். சன் டிவியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆதித்யா காமெடி சேனலில் விஜேவாகவும் பணியாற்றினார். கலைஞர் டிவி மற்றும் மக்கள் டிவி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
டப்பிங் கலைஞராக பல்வேறு கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர் தான் சரவணகுமார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலமாக புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் farzi தொடரில் இவர்தான் குரல் கொடுத்தார். இவர் மற்றும் அசார் இருவருமே இணைந்து செய்யும் நகைச்சுவையைக் காண தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 8 இன் கோப்பையை வென்ற இவர் தற்போது சில நிகழ்ச்சிகளில் அடிக்கடி தலைகாட்டி வருகின்றார்.
அதே சமயம் படங்களிலும் நடித்து வரும் இவர் இறுதியாக அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் டிஎஸ்கே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நான் சின்னத்திரையில் கேப்டன் விஜயகாந்த் குரலை மிமிக்ரி செய்து அதன் மூலம் வாய்ப்பு பெற்று தான் இந்த அளவிற்கு உயர்ந்தேன். அவருடைய குரல் தான் எனக்கு சோறு போட்டது. இன்று அவரை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள லப்பர் பந்து படத்தில் நானும் ஒரு அங்கமாக இடம்பெற்றதன் மூலம் மீண்டும் எனக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் கிடைத்து வருகின்றன. இதுவும் அவருடைய ஆசீர்வாதம் தான் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க