வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில் தமிழ் சினிமா பிரபலங்களான சூர்யா, ஜோதிகா, கார்த்திக் 50 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கி இருக்கிறார்கள்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கனமழை பெய்த காரணத்தால் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் சிலர் காணாமல் போய் உள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள மாநில அரசு பொதுமக்களிடம் நன்கொடை கேட்டு இருக்கின்றது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 8 மீட்டர் அளவில் இருந்த ஓடையானது தற்போது மிகப்பெரிய ஆறு பொருட்காட்சி அளிக்கின்றது. அங்கிருந்த குடியிருப்பு வாசிகளின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.

கேரள மாநிலத்தில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கிட்டத்தட்ட இரண்டு மாதத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் வயநாட்டில் நேற்று முன்தினம் அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலச்சரிவால் பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளன. மழை பெய்து வருவதால் வெள்ளம் குறையாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மூன்றாவது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். நேற்று முதல் ஆளாக நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்திக் ஆகியோர் 50 லட்சங்களை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து இருக்கிறார்கள். மக்களை காப்பாற்றும் பணியில் உள்ள அனைவருக்கும் தலைவணங்குகிறேன் என்று பதிவிட்டு இருக்கின்றார்.
