தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சிவகுமார். இவரின் இயற்பெயர் பழனிச்சாமி. சிவகுமார் கோவையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஓவியக் கல்லூரியில் படித்த் இவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படிப்படியாக வளர்ந்து கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த சிவகுமார் 100 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சிவகுமார் 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நடித்தார். இவரது இளம் வயது தோற்றம் மற்றும் முகம் அப்படியே முருகப்பெருமானின் கதாபாத்திரத்திற்கு வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியது. அதனால் 1967ஆம் ஆண்டு கந்தன் கருணை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார் சிவகுமார்.
முருக கடவுள் வேடம் என்றால் அது சிவகுமார் தான் என்ற அளவுக்கு பெயர் பெற்றார். அடுத்ததாக தொடர்ந்து பக்தி திரைப்படங்களில் நடித்தார். 70 களிலும் 80 களிலும் கதாநாயகனாக வளர்ந்த சிவகுமார் 90 களில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். அதன் பின்னர் அவரின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமானதும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் நடிப்பதை சுத்தமாக நிறுத்தினார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஏன் நடிப்பதை நிறுத்தினேன் என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “சித்தி சீரியலில் நான் சிவாஜி மாதிரி ஃபீல் பண்ணி நடித்தேன். ஆனால் அந்த நடிப்பைப் பார்த்து பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் சிரித்துவிட்டார். அதைப் பார்த்து நான் கோபமாகி விட்டேன். என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டு இனிமேல் நடிப்பதே இல்லை என்ற முடிவை எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.
சிவகுமார் நாடக பாணியிலான அந்த நடிப்பு பல மிமிக்ரி கலைஞர்களால் ட்ரோல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
