பிரபல நடிகரான சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும். அவரின் வித்தியாசமான மாடுலேஷனும் உடல்மொழியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அதையடுத்து அவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார். இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அஜித்தை வைத்து ‘ரெட்’ மற்றும் சூர்யாவை வைத்து ‘மாயாவி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஓடாததால் அவர் நடிப்புப் பக்கம் தன்னை மடைமாற்றிக் கொண்டார்.
தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் சிங்கம் புலி சமீபத்தில் ரிலீஸாகியுள்ள ‘மகாராஜா’ திரைப்படத்தில் பெண் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் ஒருவராக நடித்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இதுவரை அவரைப் பற்றி இருந்த காமெடியான வெகுளி இமேஜை இந்த கதாபாத்திரம் மொத்தமாக உடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது பற்றி பேசியுள்ள சிங்கம் புலி “நான் சினிமாவுக்கு காசுக்காக வரவில்லை. ஊரில் என் வாழ்க்கையை ஓட்டுவதற்கான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் நான் காசுக்காக இந்த சினிமாவில் நடிக்கவில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். சினிமாவில் இதுவும் ஒரு பகுதிதான். வாழ்க்கையில் ஒரு பகுதி போல.
என் குடும்பத்தில் என் மனைவி இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் என் குழந்தைகள் பார்த்துவிட்டார்கள். அவர்களுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை. என் மனைவிதான் படம் பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. பார்ப்போம். அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்” எனக் கூறியுள்ளார்.