தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் இறுதியாக கோட் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படம் தான் விஜயின் திரை வாழ்க்கையில் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை முடித்த கையோடு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனைத் தொடர்ந்து தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த விஜய் சமீபத்தில் முதல் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்தார்.

அதில் திமுகவை நேரடியாக தாக்கி அனல் பறக்கும் வசனங்களை பேசி இருந்தார். விஜயின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் நிற்பேன். அதற்காக எந்த கட்சி என்னை அழைத்தாலும் விஜயை எதிர்த்து நிற்க நான் தயார். ஜோசப் விஜய் அவர்களே நான் உங்களை மிகவும் மதிக்கின்றேன். உங்களை கூட பிறந்த தம்பியாக தான் பார்க்கிறேன். ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்தித்தபோது நாம் இருவரும் அரை மணி நேரம் தனியாக பேசினோம்.

அப்போ உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் இருக்காங்க ஆனா எங்க வீட்டில் என் பையன் உங்களோட ரசிகர் என்று என்கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டீங்க. ரொம்ப அமைதியாக இருந்தவர் திடீரென்று பார்த்தால் மேடையில் பயங்கரமான டயலாக் மற்றும் வசனம் எல்லாம் பேசுகிறார். நீங்கள் முதலில் களத்திற்கு வாருங்கள் அப்போதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி டயலாக் பேசுகின்றார். கூட்டம் எனக்கு கூட தான் கூடுது, கூட்டத்தை வச்சு எதையுமே கணிக்க முடியாது. உங்களை விட எனக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். நானும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த நிலையில் கடைசியில் சில சூழ்நிலைகளால் அது தள்ளிப் போய்விட்டது.

அதனால் என்னுடைய அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்க நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்கள். நான் கட்சி எதுவும் ஆரம்பிக்க மாட்டேன் பெரிய கட்சி கூப்பிட்டால் செல்வதற்கு தயாராக இருக்கிறேன். இல்லையென்றால் சுயேட்சையாகவும் நிற்பதற்கு நான் தயாரேன். திமுகவில் சேர வாய்ப்பு கிடைத்தாலும் கண்டிப்பாக சேருவேன். திமுகவினர் எல்லாம் 50 வருடம் அனுபவம் கொண்டவர்கள்.

அவர்களுடைய அனுபவம் தான் இவருடைய வயது. அதனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மேடையில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக பேசக்கூடாது. முதல்வரை விஜய் பேசுவதை பார்த்து ஒரு நடிகராக இருந்த இப்படி எல்லாம் பேசலாமா என்று வேதனைப்பட்டேன். களத்தில் இறங்கி விஜய் வேலை பார்க்க வேண்டும். விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தால் எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள். கூட்டத்தை பார்த்து எதையுமே கணிக்க முடியாது. விஜய் களத்தில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று பவர் ஸ்டார் தெரிவித்துள்ளார்
