இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்தியுள்ளார். விரைவில் அவர் அந்த சிம்ஃபொனியை உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்த்த உள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்ஃபொனிக்காக இளையராஜாவுக்கு தமிழக அரசு ஜூன் 2 ஆம் தேதி அவருடைய பிறந்தநாளில் பாராட்டு விழா நடத்தவுள்ளது.

இந்நிலையில் இளையராஜா சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் தன்னைப் பற்றி பல சுவாரஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்த போது என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வரும். அதையெல்லாம் படித்தால் என் மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். ஆனால் ஒருநாளில் நான் ஒரு முடிவு செய்தேன். தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்றும், பேப்பர் படிப்பதில்லை என்றும். அதன் பின்னர் என் மீது எந்த சொல்லடியும் விழுவதில்லை. அவதூறுகள் எல்லாம் மாலையாகதான் வந்து விழும்.” எனக் கூறியுள்ளார்.
