தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் டி எஸ் ராகவேந்திரா. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ரேவதியின் தந்தையாக தன்னுடைய மகள் விதவையாகிவிட்டதை நினைத்து புலம்பும் தந்தையாக நடித்திருப்பார். அந்த படத்தில் இடம்பெற்ற அழகு மலராட பாடலில் அவர் ஜதி சொல்லும் காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். அந்த பாடலை அவரும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்தில் அவர் கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வெற்றியை அடுத்து தொடர்ந்து அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. குறிப்பாக பாலச்சந்தரின் ’சிந்து பைரவி’திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருப்பார்.. இதனைத் தொடர்ந்து அவர் ’விக்ரம்’ திரைப்படத்தில் சற்று வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார்.
அதன் பின்னர் ‘சின்னதம்பி பெரிய தம்பி’ ’அண்ணா நகர் முதல் தெரு’ ’சொல்ல துடிக்குது மனசு’ ’வாய் கொழுப்பு’ ’கற்பூர முல்லை’ ’வாழ்க ஜனநாயகம்’ ’ஹரிச்சந்திரா’ ’நீ வருவாய் என’ ’இளையவன்’ ’காதலன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2000களுக்குப் பிறகு அவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
குணச்சித்திர நடிகரான ராகவேந்திரா நடிப்பு மட்டும் இல்லாமல் இசை பாட்டு என பல்துறை வித்திகராக இருந்துள்ளார். 1979 ஆம் ஆண்டு வெளியான நினைவில் ஒரு மலர்’ என்ற திரைப்படத்தில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை அடுத்து அவர் ’யாகசாலை’ ’தேன் சிட்டுகள்’ ’படிக்காத பாடம்’ என சில படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
1972 ஆம் ஆண்டே இவரும் இளையராஜாவும் சேர்ந்து உயிர் என்ற படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றனர். ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை என்பது பலரும் அறியாத தகவல். விஜய் ரமணி என்ற இயற்பெயருடைய ராகவேந்திரா சுலோச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியும் ஒரு சிறந்த பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.
