தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகராக திகழ்ந்து வந்தவர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பாற்றலை குறித்து நாம் தனியாக கூறத்தேவையே இல்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தி நடிப்பில் தூள் கிளப்புபவர் சிவாஜி கணேசன். இந்த நிலையில் ஒரு நாள் நடிகர் சத்யராஜ், சிவாஜி கணேசனிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.

“உங்களுக்குள் எந்த நடிகரோட பாதிப்பு இருந்தது?” என்று கேட்ட சத்யராஜிடம் சிவாஜி கணேசன், “ஏன்டா, நான் யாரைப் பார்த்து காப்பி அடிக்கிறேன்னு தெரிஞ்சிக்கனுமா?” என்று பதிலுக்கு கேட்டிருக்கிறார்.
உடனே சத்யராஜ், “நான் ஒரு விவரத்துக்காக கேட்டேன்” என்று மழுப்பினாராம். அதன் பின் பேசிய சிவாஜி கணேசன், “நான் எந்த ஹாலிவுட் நடிகரையும் காப்பியடிச்சது இல்லை. எனக்கு பிடிச்ச ஒரு நடிகர் எம்.ஆர்.ராதாதான், உங்களுக்கெல்லாம் சினிமாவுல நடிச்ச எம்.ஆர்.ராதாவைதான் தெரியும். ஆனா அவர் நாடகத்துல நடிச்சி நீங்க எல்லாம் பார்த்ததில்லை. எந்த ஹாலிவுட் நடிகனும் அவர் பக்கத்துல நிக்க முடியாது. அந்தளவுக்கு அவரது நடிப்பாற்றல் இருக்கும்” என்று எம்.ஆர்.ராதாவை புகழ்ந்து தள்ளினாராம். இதன் மூலம் தன்னுடைய நடிப்பில் யாருடைய பாதிப்பு இருந்தது என்பதை மறைமுகமாக சத்யராஜிடம் கூறிவிட்டாராம் சிவாஜி கணேசன்.

மேலும் ஒரு முறை ஒரு பத்திரிக்கை பேட்டியில், மலையாள நடிகர் மோகன்லாலிடம் இதே கேள்வியை கேட்டபோது, அவரும் எம்.ஆர்.ராதாதான் தனக்கு பிடித்த நடிகர் என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
