இளையராஜா கம்போஸிங்குக்கு நாலு மாசம் எல்லாம் காத்திருக்க முடியாது… இயக்குனர் மனோபாலாவின் ஷார்ட் கட் ரூட் இதுதான்!

By vinoth on வைகாசி 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

இளையராஜா  80 களில் உச்சத்தில் இருந்த போது தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி இயக்குனர்களும் அவரோடு ஒரு படமாவது இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இளையராஜா அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமான ஆண்டு 1976. அதிலிருந்து ரஹ்மான் அறிமுகமாகும் வரை இளையராஜா தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருந்தார்.

   

இந்த ஆண்டுகளில் அவர் சுமார் 700 படங்களுக்கு இசையமைத்திருப்பார் என சொல்லப்படுகிறது. அப்போதெல்லாம் அவரிடம் பாடல் வாங்க தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் எல்லாம் அவரது அலுவலக வாசலில் தவம் கிடப்பார்கள். ஆனாலும் அப்படியும் அவரை கம்போஸிங் உக்கார வைக்க மூன்று நான்கு மாதங்கள் கூட காத்திருக்க வேண்டியிருக்குமாம்.

 

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இயக்குனர் மனோபாலா தன் படத்துக்கு இளையராஜாவிடம் பாடல்கள் வாங்க ஒரு குறுக்கு வழியைப் பயன்படுத்தினாராம். இளையராஜா இசையமைத்து பாரதிராஜா, பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன் போன்றவர்கள் தங்கள் பட சூழலுக்கு பொருந்தாது என சொன்ன ட்யூன்களைக் கொடுங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுவாராம்.

அவர்களுக்காக இளையராஜா இசையமைத்தால் அந்த ட்யூன் எப்படியும் நன்றாகதான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த ட்யூன்களை வாங்கி பயன்படுத்திக் கொள்வாராம். இதை மகேந்திரனின் மகனும் இயக்குனருமான ஜான் மகேந்திரன் ஒரு பாட்காஸ்ட் வீடியோவில் பேசியுள்ளார்.