“நேரடியா களத்துல இறங்குறேன்”…. தமிழக அரசியலில் புதிய புயல்… தனுஷின் அதிரடி முடிவின் பின்னணி….!

By Nanthini on ஆவணி 12, 2026

Spread the love

தமிழக உரிமை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் நடிகர் தனுஷ் பேசத் தொடங்குவார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதி வாரியாக தனுஷ் நற்பணி மன்ற உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ள சூழலில், அடுத்தகட்டமாக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்துத் தன் கருத்துகளை வெளியிடுவதற்கு அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. விஜய் அரசியலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தனுஷின் இந்த நகர்வும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்தச் சந்திப்புகளின் போது நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து அளிப்பதோடு, குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் ஸ்கூல் பேக் வழங்கும் வழக்கத்தையும் கைக்கொண்டுள்ளார். மேலும் பெண்களுக்குப் பட்டுச் சேலை வழங்கி சிறப்பிப்பதும், தனுஷின் பிறந்தநாள் விழாவில் நற்பணி மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

   

இதன் தொடர்ச்சியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷின் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தினமும் உணவு வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இயக்குநர் சுப்பிரமணியம் சிவாவின் முன்னெடுப்பில் உருவான இந்தச் சேவையை இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் தனது சமூக நலச் செயல்பாடுகளை தனுஷ் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

   

அரசியல் வருகையின் அடுத்தகட்ட நகர்வாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் ‘அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம்’ சார்பில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தனுஷ் தனது அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தி வருகிறார் என்று பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் மாநில உரிமைகள் சார்ந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசுவதோடு, தமிழகத்தில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடிக்கும் போது தனுஷ் நேரடியாகக் களம் இறங்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.