தொகுதி மறுவரையறை விவகாரம் இந்தியாவில் பெரிய அளவிலான அரசியல் விவாதங்களை கிளப்பியுள்ள சூழலில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது தொடர்பான முக்கிய அரசினர் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, முதலமைச்சர் விஜய் இத்தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு புதிய தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கவே தற்போதைய தொகுதி எண்ணிக்கையை மாற்றக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தில், மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான இடங்களின் விகிதாச்சாரப் பகிர்வை மாற்றக் கூடாது என்றும் ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையே தற்போதுள்ள 2.2:1 என்ற உறுப்பினர்கள் விகிதத்தையும் அவ்வாறே நிலைநிறுத்த வேண்டும் என இத்தீர்மானம் தெளிவுபடுத்துகிறது.
இதனுடன் சேர்த்து, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் 2029-ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலிலேயே தற்போதைய 543 தொகுதிகளின் அடிப்படையில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இதைச் செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.
