பிரபல மலையாள நடிகரும், புகழ்பெற்ற இயக்குநருமான ஸ்ரீனிவாசன் (69) அவர்கள் இன்று காலமானார். கொச்சியில் உள்ள திரிபுனித்துரா தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. 1976-ம் ஆண்டு ‘மணிமுழக்கம்’ என்ற படத்தின் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீனிவாசன், சுமார் 50 ஆண்டுகாலமாகத் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். மலையாளம் மற்றும் தமிழ் எனப் பல மொழிகளில் 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி முதல் திலீப் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து, தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழில் ஷாம் நடித்த ‘லேசா லேசா’ படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் தமிழக ரசிகர்களிடையே இன்றும் நினைவுகூரத்தக்கது.
