பாலச்சந்தர் தன்னுடைய அதிக படங்களுக்குப் பயன்படுத்திய இசையமைப்பாளர்… வி குமார் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் எப்போதும் இரு துருவங்கள் கோலோச்சுவார்கள். ஒரு பக்கம் எம் ஜி ஆர் என்றால் மற்றொரு பக்கம் சிவாஜி. ஆனால் இவர்களுக்கு நடுவில் ஜெமினி கணேசனும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

அதுபோல கே வி மகாதேவன் மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் ஆகியோர் தங்கள் இசையால் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த போதுதான் வி குமார் பாலச்சந்தரின் நீர்க்குமிழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அது முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்த அவரை ரசிகர்கள் ‘மெல்லிசை மாமணி’என்ற பட்டம் கொடுத்து அழைக்க ஆரம்பித்தனர்.

   

சென்னை ராஜதானியில் 1934 ஆம் ஆண்டு தெலுங்கு குடும்பம் ஒன்றில் வரதராஜுலு குமார் பிறந்தார். இசையில் கொண்ட ஆர்வம் காரணமாக அதைக் கற்றுக்கொண்டு மேடை நாடகங்களுக்கு இசையமைத்தார். அப்படிதான் அவருக்கு பாலச்சந்தரோடு பழக்கம் ஏற்பட்டு அவரால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டார்.

பாலச்சந்தர் தன்னுடைய படங்களில் அதிகமாக இசையமைப்பாளராக பயன்படுத்தியது குமாரைதான். குமார் ஏ ஆர் ரஹ்மானின்  தந்தை சேகரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதே போல  சேகர் இவருக்கு ப்ரோகிராமராக வேலை பார்த்துள்ளார்.

1991 ஆம் ஆண்டு வரை பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த குமார் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.  பல ஜானர்களில் இசையமைத்துள்ள குமாரின் ஹிட் பாடல்களாக ‘தாமரை கண்ணங்கள்’. ‘காதோடுதான் நான் பேசுவேன்’, அடுத்தாத்து அம்புஜத்த, வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்  போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களாக அமைந்துள்ளன.