சிவாஜி எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியர்… 80 வயதில் ஹீரோ- சொக்கலிங்க பாகவதரை ஞாபகம் இருக்கா?

By vinoth

Updated on:

1907 ஆம் ஆண்டு பிறந்த சொக்கலிங்க பாகவதர் தமிழ் நாடக உலகில் நடிகராக ஆயிரக்கணக்கான நாடகங்களில் நடித்து பிரபலமானவர். இவர் 1939 ஆம் ஆண்டே துக்காரம் என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார்.  அதற்கடுத்த ஆண்டுகளில் அவர் ரம்பையின் காதலி தானசூர கர்ணா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அதன் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

நாடக உலகில் நடிப்பு பயிற்றுனராகவும் இருந்த அவரை இயக்குனர் பாலு மகேந்திரா தன்னுடைய வீடு படத்தில் ஓய்வு பெற்ற பாட்டு வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மீண்டும் 1988 ஆம் ஆண்டு சினிமாவுக்கு அழைத்து வந்தார். இந்த படம் இரண்டு பிரிவுகளில் தேசிய விருதைப் பெற்றது.

   

அதன் பின்னர் பாலுமகேந்திரா தான் இயக்கிய சந்தியா ராகம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சொக்கலிங்க பாகவதரை நடிக்க வைத்தார். நடுத்தர வர்க்க குடும்பங்களில் முதியவர்கள் சந்திக்கும் பிரச்சனையை எதார்த்தமாக எடுத்துக் காட்டிய இந்த படத்தில் பாகவதரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அவருக்கு சிறு சிறு வேடங்கள் கிடைக்க ஆரம்பித்தன. 90 களில் தெற்கு தெரு மச்சான், ஜெண்டில் மேன், ஜெய்ஹிந்த், உழைப்பாளி, சதி லீலாவதி, இந்தியன், ராமன் அப்துல்லா,  வேலை ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த படம் பிரான்ச்சி என்ற இத்தாலிய படமாகும்.

அதன் பிறகு உடல்நிலை காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்த அவர் 2002 ஆம் ஆண்டு தன்னுடைய 94 ஆவது வயதில் காலாமானார். மிகச் சிறந்த நடிகராக இருந்தும் பாலு மகேந்திரா தவிர அவருக்கு யாரும் நல்ல கதாபாத்திரங்களை தரவில்லை. ஒரு மிகச்சிறந்த நடிகரை தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் இருந்தது ரசிகர்களுக்குதான் பெரிய இழப்பாகும்.