இந்தியாவில் பலருக்கும் தெரியாத வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றுதான் உண்டவல்லி குகை. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிற்றூரில் இந்த உண்டவல்லி குகைகள் அமைந்திருக்கிறது. இதன் வரலாறு என்ன எப்படி உருவானது என்பதை பற்றி இனி காண்போம்.

இந்த உண்டவல்லி குடைவரைகள் நான்கு முதல் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. இதில் நான்கு தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளமும் கூரைகள் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தின் மண்டபம் ஏழு தலைவாயில்களை கொண்டுள்ளது. உலககத்திலேயே குடைவரை கோயில்களுக்கான முன்மாதிரி கட்டிடமாக இந்த உண்டவல்லி குடவரை இருக்கிறது.
இந்த உண்டவல்லி குடவரையில் திருமாலை பற்றிய சிற்பங்கள் அதிகமாக இருக்கின்றது. இது பார்ப்பதற்கு ஒரு குகை போல இருந்தாலும் குடவரை கோட்டையாக தான் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. பாறைகளில் இவ்வளவு நுணுக்கமாக எப்படி செதுக்க முடியும் என்ற அனைவரும் வியக்கும் அளவுக்கு இந்த குடவரை கட்டிடம் இருக்கிறது. மேலும் இந்த குடவரை கோயிலில் மகாவிஷ்ணுவின் சிலை ஒற்றை பளிங்கு கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்த இடத்தில் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த உண்டவல்லி குடைவரையில் புத்த மடாலயங்கள் போன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த உண்டவல்லி குடவரைகளை பௌத்த மத குருக்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. இந்தப் பாறை குடைவரைகள் கிருஷ்ணா ஆற்றை நோக்கியவாறு அமைந்திருக்கிறது. நீங்கள் விஜயவாடாவிற்கு சுற்றுலா சென்றால் அங்கே கண்டிப்பாக இந்த குடவரை கோயிலையும் உங்கள் சுற்றுலா தளங்களில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இதற்கு பக்கத்தில் தான் விஜயேஸ்வரர் கோயில், காந்தி ஸ்தோபம், மகாலட்சுமி அம்மாவாரி கோயில் அமைந்திருக்கிறது. அதனால் இதை கட்டாயம் சென்று பாருங்கள்.
