ஆடி மாதம் என்றாலே ஆன்மீக மாதம் மற்றும் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் விசேஷமான அபிஷேகங்கள், பூஜை புனஸ்காரங்கள் நடைபெறும். அம்மனுக்கு பொங்கல் வைத்து கூழ் ஊற்றி நேர்த்தி கடன்கள் செய்து பக்தர்கள் வழிபடுவர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம்.
ஆடிப்பூரம் விழாவானது ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அம்மனுக்கு உகந்த நாளாகும். இன்றைய நாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள் சக்தியாக உருவெடுத்த தினம் இந்த ஆடிப்பூரம் என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த ஆடிப்பூர நன்னாளில் தான் ஆண்டாள் அவதரித்தார். அதனால் வைணவ ஆலயங்களிலும் ஆடிப்பூர விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு ஆடிப்பூரம், ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் அம்மன் கோவிலில் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதோடு அம்பாளுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்வும் நடைபெறும். அம்மனுக்கு வளையல் அணிவிக்க பெண்கள் பலரும் வளையல்களை வாங்கி கொடுப்பார்கள். அம்பாள் வளையல் அணிந்து தாய்மை கோலம் பூண்ட இந்த நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து வழிபடுவதால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கவும், இளம் வயது பெண்களுக்கு திருமணம் கைகூடவும் இந்த ஆடிப்பூர வழிபாடு மிகவும் சிறந்த ஒன்றாகும்.
அம்மன் கோயில்களில் அம்மனுக்கு போடப்பட்ட வளையல்களை பெண்கள் வாங்கி அணிந்து கொண்டால் மனம் போல் மாங்கல்யம், தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். சித்தர்களும் முனிவர்களும் கூட இந்த ஆடிப்பூர நாளில் தான் தங்களுடைய தவத்தை தொடங்குவார்கள் என புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்தது இந்த ஆடிப்பூர நன்னாள்.

ஆடிப்பூர நாளில் ஆண்டாள் அவதரித்த தினம் என்பதால் வைணவ தளங்களில் ஆண்டாளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். பெருமாளையே கணவனாக நினைத்து மாலையை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளை ஆடிப்பூர நாளில் தரிசனம் செய்தால் திருமண வரம் கிடைக்கும், ஆனந்தமான வாழ்வு அமையும். சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர்களும், தொழில் போட்டியால் பிரிந்த கூட்டாளிகள் ஒற்றுமை ஏற்பட இந்த ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்கினால் தம்பதியர் ஒற்றுமை, பிரிந்தவர்கள் கூடுவார்கள், பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள் போன்றவைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் இந்த ஆடிப்பூர நன்னாளில் தான் தேரோட்டம் நடைபெறுகிறது.
