“என்னால அவரை மறக்க முடியல” கல்யாணமாகி குழந்தை பிறந்தும் காதலனை மறக்கமுடியாமல் தவித்த பெண்… தாங்கமுடியாத வேதனையால் அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த சசிகலாவும் (27), இராமேஸ்வரத்தில் டிராவல்ஸ் தொழில் செய்து வந்த பாண்டியும் (28) நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். பாண்டியின் தரப்பில் பெண் கேட்கச் சென்றபோது, சசிகலாவின் குடும்பத்தினர் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்குச் சம்மதிக்க மறுத்துவிட்டனர். குடும்பத்தினரின் வற்புறுத்தலால், தனது காதலைத் தியாகம் செய்த சசிகலா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினரான முருகன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சசிகலாவின் விருப்பமில்லாமல் நடந்த இந்தத் திருமணத்திற்குப் பிறகும், அவர் தனது கணவருடன் குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்தார். தற்போது இந்தத் தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒரு குழந்தைக்குத் தாயாகி, திருமண வாழ்க்கை தொடங்கி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், சசிகலாவால் தனது பழைய காதலன் பாண்டியை மறக்க முடியவில்லை.

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், சசிகலா தனது முன்னாள் காதலன் பாண்டியுடன் ரகசியமாகத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் தனது கணவர் பணி நிமித்தமாகச் சென்னை சென்றிருந்த நேரத்தில், சசிகலா தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து சசிகலாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் நிலையத்தில் நடந்த சமரசப் பேச்சின் போது, சசிகலாவின் எதிர்காலம் மற்றும் அவரது 4 வயதுக் குழந்தையைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். அதன்பின், சசிகலா தனது தந்தையுடன் செல்லச் சம்மதித்து வீட்டிற்குத் திரும்பினார். இருப்பினும், காதலனைப் பிரிந்த துயரமும், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சமூக அவமானமும் அவரை மனதளவில் கடுமையாகப் பாதித்தது.

   

யாரிடமும் சரியாகப் பேசாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சசிகலா, நேற்று முன்தினம் இரவு யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஒரு குழந்தைக்குத் தாயான பெண், காதலுக்காக எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி சசிகலாவின் காதலன் பாண்டிக்கு எட்டியதும் மிகுந்த மனவேதனை அடைந்தார். பாண்டி தனது டிராவல்ஸ் தொழில் நிமித்தமாகச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்குச் சென்றிருந்தார். பயணிகளை இறக்கிவிட்டுவிட்டுத் தனது காரில் மீண்டும் ராமேஸ்வரம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.

   

தர்மபுரி மாவட்டம் பாளையம் சுங்கச்சாவடி அருகே அவர் வந்து கொண்டிருந்தார். தான் உயிருக்கு உயிராக நேசித்த பெண் இனி இல்லை என்ற செய்தியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அவருக்கு இல்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் சுங்கச்சாவடி அருகே காரை ஓரமாக நிறுத்தினார். அங்கிருந்த ஒரு மரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு காதல் ஜோடி, இடையில் ஐந்து ஆண்டுகள் பிரிந்திருந்தும், ஒருவரையொருவர் மறக்க முடியாமல் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.