பெங்களூருவில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, வக்கிரம் புரிந்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஹெப்பகோடி பகுதியில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் திருடிய உள்ளாடைகளைத் தானே அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்ததுடன், அந்தப் பெண்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 19, 2026 அன்று வித்யா நகர் குடியிருப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் இரவு நேரங்களில் வீட்டின் கூரைகள் வழியாக ஏறி வரும் மர்ம நபர் ஒருவர், முற்றத்தில் காயப்போடப்பட்டிருக்கும் பெண்களின் துணிகளைத் தொடர்ந்து திருடிச் சென்றுள்ளார். குறிப்பாகப் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் மீண்டும் மீண்டும் காணாமல் போனதால் சந்தேகமடைந்த மக்கள், அப்பகுதியில் மர்ம நபர் நடமாடுவதைக் கண்டு போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்தச் செயலால் வித்யா நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். தங்கள் கண்ணியம் மீறப்பட்டதாகவும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
