அதிமுக அமைப்புச் செயலாளர் மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நமது கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிகவும் நிதானமான முறையில் கட்சியை வழிநடத்தி வருகிறார். அதிமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்தில் முதுகில் குத்துபவர்களும் உண்டு, நெஞ்சில் குத்துபவர்களும் உண்டு. நம்முடன் தோளில் கையைப் போட்டுக்கொண்டே, இந்த இயக்கத்தை எப்படியெல்லாம் நசுக்க வேண்டும் என்று உள்ளுக்குள் திட்டம் போடுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் யாரென்று எடப்பாடியார் அவர்களுக்குத் தெரியாது என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.
பொதுச்செயலாளர் இப்போது நிதானத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். யார் துரோகி, யார் எதிரி என்பதை அவர் கூர்ந்து கவனித்து வருகிறார். இப்போதே அவர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த இயக்கத்திற்குத் துரோகம் செய்த அனைவரையும் அவர் பார்த்துக் கொள்வார். அந்த நிமிடம் அவர்களுக்குப் புரியும். வரும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி, அப்போது இவர்களுக்கு உரிய பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
