டெல்லியிலிருந்து பாட்னா நோக்கி முதல் ஏசி பெட்டியில் பயணித்த அங்கிதா என்ற பெண் பயணிக்கு ரயில் பயணத்தின்போது ஏற்பட்ட ஒரு சுவாரஸ்யமான அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. ரயில் கான்பூர் நிலையத்தை அடைந்தபோது, தனது தோழியைச் சந்திப்பதற்காக அங்கிதா வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கீழே இறங்கியுள்ளார். ஆனால், திரும்பி வந்து பார்த்தபோது அவரது மேல் பெர்த் இருக்கையில் வேறு ஒரு வாலிபர் அமர்ந்திருப்பதைக் கண்டார்; அவரது பையும் கீழே நகர்த்தப்பட்டிருந்தது.
உடனடியாக அந்த வாலிபரிடம் தனது இருக்கையைக் காலி செய்யுமாறு அங்கிதா அமைதியாகக் கோரியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், “நீங்கள்போய் எனது மிடில் பெர்த்தில் படுத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறி நழுவ முயன்றுள்ளார். ஆனால் அதனை எவ்விதத்திலும் ஏற்க மறுத்த அங்கிதா, தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி ஒரு அதிரடி ஐடியாவை யோசித்துள்ளார்.
“சரி, எனக்கு உடனே ரூ.3,245 கொடுங்கள், நான் எனது இருக்கையைத் தருகிறேன்” என அவர் ஷாக் கொடுத்துள்ளார். அந்த வாலிபர் அதிர்ச்சியடைந்து ரூ.2,000 தருவதாகக் கூறியும், அங்கிதா அதனை உறுதியாக மறுத்துவிட்டார். ரெயில் பயணங்களில் நடக்கும் இது போன்ற சுவாரஸ்யமான மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் தற்போது நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
