சென்னை கோயம்பேடு அருகே ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியைக் கொலை செய்ய முயன்ற வாலிபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஷர்மிளா, அரியலூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், மொட்டை மாடியில் துணி துவைக்கச் சென்ற மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் இடுப்பு எலும்பு உடைந்து பலத்த காயமடைந்த மாணவி, தனியார் மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்து தப்ப முயன்ற சிலம்பரசனை அக்கம் பக்கத்தினர் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுபோதையில் இச்செயலைச் செய்த சிலம்பரசன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு காவல்துறை, அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
