நெஞ்சை பதறவைக்கும் கூகுள் மேப்ஸ் கோளாறு… அரசு ஆவணங்களில் இருந்து துடைத்தெறியப்பட்ட கிராமம்… கதறும் மக்கள்…!

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தின் நார்கி பிளாக்கிற்கு உட்பட்ட ‘ஆக்லாபாத் ஹசன்பூர்’ கிராமத்தில் கூகுள் மேப்ஸின் ஒரு சிறிய எழுத்துப் பிழையால் ஒட்டுமொத்த கிராம மக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசு ஆவணங்களில் இக்கிராமத்தின் பெயர் ‘ஆக்லாபாத் ஹசன்பூர்’ என்று துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூகுள் மேப்ஸ் செயலியில் இது ‘அகிலாபாத்’ என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இந்த ஒரு சிறிய எழுத்து முரண்பாடு கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையையே முடக்கியுள்ளது.

இப்போது ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கான ஆன்லைன் பதிவுகள் போன்ற அனைத்தும் சரிபார்ப்புக்காக பின்னணியில் கூகுள் மேப்ஸின் ஜிபிஎஸ் தரவுகளையே பயன்படுத்துகின்றன. இதனால் கிராம மக்கள் ஆன்லைன் போர்ட்டலில் தங்கள் கிராமத்தின் சரியான பெயரான ‘ஆக்லாபாத்’ என்பதை உள்ளிடும்போது, சிஸ்டத்தின் பின்னணியில் கூகுள் மேப்ஸால் ஃபீட் செய்யப்பட்டுள்ள ‘அகிலாபாத்’ என்ற பெயருடன் அது ஒத்துப்போகாமல் விண்ணப்பங்கள் அனைத்தும் தானாகவே நிராகரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கிராம மக்களுக்கு எந்தவொரு முக்கிய அரசுச் சான்றிதழ்களும் கிடைக்காமல் அரசுப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

   

இந்த விசித்திரமான தொழில்நுட்பப் பிரச்சினை குறித்து கிராம மக்கள் ஏற்கனவே அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர். ஆனால் அப்போதைய தொழில்நுட்பக் குழுவினர் அலட்சியமாக செயல்பட்டு, கூகுள் மேப்ஸில் இருக்கும் தவறான பெயரையே சரி என்று கூறி புகாரை முடித்து வைத்தனர். தற்போது இந்த விவகாரம் மீண்டும் தீவிரமடைந்து ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டுள்ளது. இது போன்ற ஒரு விசித்திரமான சிக்கலைத் தீர்க்க, கூகுள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மற்றும் வரைபடத் தரவுத்தளத்தில் கிராமத்தின் பெயரைச் சரிசெய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கூகுள் நிறுவனத்திற்கு நேரடியாக அதிகாரப்பூர்வக் கடிதம் எழுதப்படும் என்று எஸ்டிஎம் சதீந்திர சிங் கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.