புனே அருகே உள்ள லோஹகாட் கோட்டையில் 26 வயதான கேதன் அகர்வால் என்ற வாலிபர், அவரது 20 வயது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயல் மற்றும் அவளது காதலன் சேத்தன் சவுத்ரி ஆகியோரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், பிறந்தநாள் சுற்றுலாவின் போது கோட்டையிலிருந்து தவறி விழுந்து ஏற்பட்ட விபத்து மரணம் என கருதப்பட்ட இந்த வழக்கு, போலீசாரின் தீவிர விசாரணையில் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திட்டமிட்ட கொடூர கொலை என்பது தெரியவந்தது. சியா மற்றும் அவரது காதலன் சேத்தன் இருவரும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து கேதனின் தாய் புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்கு முன்பாக சியா தங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, தங்களது பாரம்பரியமிக்க வீட்டில் மது அருந்துவதற்கு அனுமதி இல்லை என்றும், பார்ட்டிகளுக்கு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றும் அவரிடம் தெளிவாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், சியா தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும், இந்த விஷயத்தை அவரது பெற்றோர் தங்களுக்குத் தெரிந்தே மறைத்து ஏமாற்றிவிட்டதாகவும் கேதனின் தாய் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
மகன் இழந்த துக்கத்தில் இருக்கும் கேதனின் தந்தை விஷால் அகர்வால், சியாவுக்கு வேறொருவருடன் காதல் தொடர்பு இருந்தாலோ அல்லது இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலோ, திருமணத்தை நேரடியாக மறுத்திருக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு செய்திருந்தால் திருமணத்தை தாங்களே உடனே நிறுத்தியிருப்போம் என்றும், ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்கு இவ்வளவு கொடூரமான மனநிலைக்கு அவர்கள் எப்படிச் சென்றார்கள் என்றும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட சியா மற்றும் அவரது காதலனுக்கு சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கேதனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
