அம்மா னா சும்மவா… மகனின் ஆசை… தேர்வு நேரத்தில் வந்த கொடூர நோய்…ஐஐடி கனவை நனவாக்கிய ‘சூப்பர் மாம்’… பார்வையை இழந்த மகனுக்காக மீண்டும் படித்த பி.எட் பட்டதாரி…!

By Visaka on ஆடி 5, 2026

Spread the love

மகனின் மருத்துவ அவசர நிலையிலும் அவனது ஐஐடி கனவு கலைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு தாய் மீண்டும் மாணவியாக மாறி சாதித்துக் காட்டியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரைச் சேர்ந்த குஞ்சன் குமார் என்ற மாணவர், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்குத் தயாராகி வந்தபோது, தேர்வு நெருங்கிய நேரத்தில் ‘நிமோதோராக்ஸ்’ (நுரையீரல் செயலிழப்பு) மற்றும் கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த இக்கட்டான கட்டத்தில், அவரது தாயாரும் பி.எட் பட்டதாரியுமான குஞ்சா, மகனுக்காகக் களமிறங்கினார். அவர் மகனுடன் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளைக் கவனித்ததுடன், விரிவான குறிப்புகளையும் தயாரித்து மகனுக்குக் கற்றுக் கொடுத்து அவனது படிப்பைத் தொய்வின்றித் தொடரச் செய்தார்.

தாயின் இந்த தன்னலமற்ற தியாகத்திற்கும் உறுதுணைக்கும் கிடைத்த வெற்றியாக, குஞ்சன் ஜேஇஇ மெயின் தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அசத்தினார். மேலும், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் மாற்றுத்திறனாளி ஓபிசி பிரிவில் 50-வது ரேங்கையும் பெற்று, தற்போது இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடி டெல்லியில் கணினி அறிவியல் பிரிவில் சேர்ந்துள்ளார். “சூழ்நிலைகள் சவாலாக இருந்தபோதும், தேர்வுகள் அறிவை மட்டுமல்லாமல் என் தாயின் பாசத்தையும் தைரியத்தையும் சோதித்தன; அம்மாவின் ஆதரவே என் வெற்றிக்குக் காரணம்” என்று குஞ்சன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஒரு தாயின் விடாமுயற்சியும், மகனின் அசாத்திய துணிச்சலும் இணைந்து இன்று ஒரு மிகப்பெரிய ஐஐடி கனவை நனவாக்கியுள்ளது பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.