மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பங்காங்கா பகுதியில் அனுமதியின்றிச் செயல்பட்டு வந்த ‘பிரேமாஷ்ரய்’ முதியோர் இல்லம், அங்கு எடுக்கப்பட்ட ஒரு அதிர்ச்சி வீடியோவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் அதிரடியாகச் சீல் வைக்கப்பட்டது. இந்த இல்லத்தில் வசித்து வந்த 14 வயது சிறுவன் ஒருவன், முதிய பெண்களைத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை தீவிரமாகக் கவனித்த இந்தூர் மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, அங்கு வசித்து வந்த முதியவர்களை கணேஷ் ஆஷ்ரம், நிராஷ்ரித் சேவா ஆஷ்ரம் மற்றும் ஆஷா நிலய் போன்ற அங்கீகரிக்கப்பட்ட முதியோர் இல்லங்களுக்குப் பாதுகாப்பாக மாற்றினார்.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு தீக்காயங்களுடன் இறந்துபோன தனது தாயுடன் அந்த இல்லத்திற்கு வந்த அந்தச் சிறுவன், கடந்த புதன்கிழமை முதிய பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் வன்முறையில் ஈடுபட்டுள்ளான். ஆரம்பகட்ட விசாரணையில் அவனது மனநிலை சரியில்லை என்பது தெரியவந்த நிலையில், அவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, முறையான மனநலக் கவுன்சலிங் மற்றும் காப்பக மேற்பார்வைக்கு உட்படுத்தப்படவுள்ளார். மேலும், அரசு நிலத்தில் எந்தவித உரிய அனுமதியுமின்றி இந்த முதியோர் இல்லத்தை இயக்கிய அதன் நிர்வாகி மீது காவல் துறை மூலம் எஃப்ஐஆர் பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
