ராபிடோ பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்திய பெண் பயணி ஒருவர், தனது பயணம் முடிந்ததும் 80 ரூபாய் கட்டணத்திற்கு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். ஆனால், ஓட்டுநரிடம் மீதி தர வேண்டிய 20 ரூபாய் சில்லறை இல்லை.
ஆன்லைன் மூலம் மீதித் தொகையை அனுப்புமாறு அப்பெண் கோரியபோது, அதற்கும் மறுத்த ஓட்டுநர், தனது பையிலிருந்த 10 ரூபாய் சலவைத் தூள் , 10 ரூபாய் ஜெல்லி மற்றும் 2 ரூபாய் காபித்தூள் பாக்கெட்டைக் கொடுத்து, “20 ரூபாய் கணக்குச் சரியாகப் போச்சு, அடுத்த முறை வரும்போது சில்லறையோடு வாருங்கள்” எனக் கூறியுள்ளார்.
தனக்கு எந்தப் பொருட்களும் தேவையில்லை என்றும், மீதிப் பணத்தையே திருப்பித் தருமாறும் அப்பெண் உறுதியாகக் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஓட்டுநரிடம் சில்லறை இல்லை என்பதால் வாடிக்கையாளரின் விருப்பமின்றி பொருட்களை வழங்கிச் சரிக்கட்டுவது நியாயமா என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
