டெல்லி மெட்ரோவின் ஜாமா மஸ்ஜித் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் வழக்கம் போல சோதனையிடப்பட்டன. அப்போது பயணி ஒருவரின் உடமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பதைச் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டறிந்தனர். இதையறிந்த அப்பயணி உடனடியாக அவ்விடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றார். எனினும், சுதாரித்துக் கொண்ட சிஐஎஸ்எஃப் படையினர் அவரைச் சமயோசிதமாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், அவர் தனது உள்ளாடையில் தனியாகப் பை தைத்து, அதற்குள் அடையாளம் தெரியாத அரை திடப் பொருள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரது இந்த விசித்திரமான கடத்தல் முறை பாதுகாப்பு அதிகாரிகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் பொருள் மேலதிகப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/IndiaToday/status/2112173029182804214/video/1
விசாரணையில், அவர் மலேசியாவின் கோலாலம்பூரில் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர் என்பது தெரியவந்தது. அவரிடம் கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்குரிய பொருள் என்ன என்பது குறித்தும், அதை எதற்காகக் கடத்தி வந்தார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால், அந்தப் பயணி மேல் நடவடிக்கைக்காக உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
