அருணாச்சல் பிரதேசத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் நிலச்சரிவில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அம்மாநிலத்தின் லோயர் சியாங் மாவட்டத்தில் உள்ள சிஜி பகுதியில் கடந்த ஜூன் 28 அன்று இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
வைரலாகி வரும் வீடியோவில் மழைக்காலச் சேறும் சகதியுமாக இருக்கும் ஒரு குறுகலான மலைப் பாதையை அந்த வாகன ஓட்டி மிகவும் கவனமாகக் கடக்க முயல்கிறார். அவர் மெதுவாக முன்னேறிச் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக அவர் நின்று கொண்டிருந்த மொத்த மலைப்பகுதியும் அப்படியே சரிந்து விழத் தொடங்குகிறது. அடுத்த சில நொடிகளில், டன் கணக்கிலான மண், கற்கள் மற்றும் மரங்களுடன் சேர்ந்து அந்த இளைஞரும் அவரது பைக்கும் தப்ப வழியின்றி அடியோடு அடித்துச் செல்லப்படுகிறார்கள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நிலச்சரிவு மொத்தமாக கீழே இருந்த சிஜி ஆற்றுக்குள் விழுந்து, பெரும் தூசு மண்டலத்தை ஏற்படுத்துகிறது. பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கும் இந்த விபத்தில், அந்தப் பைக் ஓட்டிக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவொரு காயமும் இன்றி அற்புதமாக உயிர் தப்பியுள்ளார். இந்த பயங்கர நிலச்சரிவின் காரணமாக சிஜி ஆற்றின் நீரோட்டம் தற்காலிகமாக தடைபட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
