கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்ட பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம் மீது மர்ம நபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துமகூரு மாவட்ட துணை ஆணையர் சுபா கல்யாண் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி அஸ்விஜா ஆகியோருடன் நடிகை ரச்சிதா ராம் மேடையில் உலா வந்துகொண்டிருந்தபோது, திடீரெனக் கூட்டத்தில் இருந்து பாய்ந்து வந்த நபர் ஒருவர் நடிகையின் தோளில் கையை வைத்து வளைத்துப் பிடித்துச் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நடிகையை அந்த நபர் இழுத்ததால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உஷாரடைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த நபரை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். பொது நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் மற்றும் பெண்களுக்கு நிலவும் பாதுகாப்புப் பற்றாக்குறை குறித்து இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
