மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்திலுள்ள போர்கோன் கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான சங்கர் அப்பாராவ் கிஷிர்சாகர் என்ற விவசாயி, சோயாபீன் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இருப்பினும், போதிய மழையின்மை காரணமாக விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டு கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டார். அதே சமயம், அவரது மகள் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்ததால், குடும்பத்திற்கு நிதிச்சுமை மேலும் அதிகரித்தது.
வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, மகளின் மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தில் விலக்கு கோரி அரசு திட்டத்தின் கீழ் அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்த கல்விக்கட்டணத் தள்ளுபடி அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியும் மன உளைச்சலும் அவரை ஆழ்ந்த விரக்திக்குத் தள்ளியது.
இறுதியில் தனது விவசாய நிலத்திற்குச் சென்ற அவர், தனக்கு ஏன் கடன் தள்ளுபடியோ அல்லது மகளின் படிப்புக்கான கட்டண சலுகையோ கிடைக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியருக்கு கேள்வி எழுப்பி ஒரு வீடியோவை பதிவு செய்தார். அந்த காணொளியை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னர், குடும்பத்தினர் அவரை மீட்க வருவதற்குள் வயலிலேயே தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
