ரியல் ஹீரோ!.. சமையலறையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ… தெய்வமாய் நுழைந்த டெலிவரி ஏஜென்ட்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

By Gayathri on ஐப்பசி 21, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பார்சல் வழங்கச் சென்ற டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தை சாதுரியமாக அணைத்து பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த மருத்துவரான ஷிவாங்கி ஜோஷி என்பவர் இணையத்தில் ஆர்டர் செய்த பார்சலைப் பெற வீட்டின் வாசலுக்கு வந்தபோது, அவரது சமையலறை அடுப்பில் இருந்த பாத்திரத்தில் எண்ணெய் அதிகளவில் சூடாகி திடீரென தீப்பிடித்துக் கொழுந்துவிட்டு எரிந்தது.

சமையலறையிலிருந்து கிளம்பிய அடர்ந்த புகையையும் தீப்பிழம்புகளையும் கண்டு அந்தப் பெண் செய்வதறியாது திகைத்துப் போனார். சூழ்நிலையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்த டெலிவரி ஊழியர், சற்றும் யோசிக்காமல் வீட்டிற்குள் விரைந்தார். எரியும் தீயைக் கண்டு அஞ்சாமல், அங்கிருந்த ஒரு துணியை எடுத்து எண்ணெய் பாத்திரத்தின் மீது சாதுரியமாகப் போர்த்தி, ஆக்ஸிஜன் செல்வதைத் தடுத்து தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

   

டெலிவரி ஊழியரின் இந்த துணிச்சலான சமயோசித செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த மருத்துவர் ஷிவாங்கி, தக்க சமயத்தில் உதவிய அந்த நபருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், ஆபத்தான சூழலிலும் துரிதமாகச் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்த டெலிவரி ஊழியரைப் பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.