அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், தனது வீட்டில் மனைவியின் கள்ளக்காதலனைக் கண்ட ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்திக் கொன்ற 34 வயதான இஸ்மாயில் பினெடலோபஸ் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பினெடலோபஸும் அவரது மனைவி வெண்டியும் மாறி மாறி வேலை செய்து தங்கள் 4 வயது இரட்டைச் குழந்தைகளைக் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 24 அன்று பணி முடிந்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்த பினெடலோபஸ், தனது படுக்கையறையில் குழந்தைகளுடன் அரைநிர்வாண நிலையில் இருந்த நிக்கோலஸ் கார்சியா (28) என்பவரைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரைத் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
பினெடலோபஸுக்கு அன்றைய தினமே தனது மனைவி வெண்டிக்கு வேறொரு நபருடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. ஆத்திரமடைந்த அவர் கார்சியாவைக் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்தபோதிலும், தனது மனைவியையோ அல்லது குழந்தைகளையோ எந்தவிதத்திலும் காயப்படுத்தவில்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அண்டை வீட்டார்கள் இவரை அமைதியான குணம் படைத்தவர் என்றும், இந்தத் தம்பதியினர் வழக்கமாக நல்ல முறையில் பழகி வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பினெடலோபஸ் மீது கொடூரக் கொலைக் குற்றச்சாட்டும், கொடிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதற்கான குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவரது மனைவி வெண்டி கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இவ்வழக்கு தொடர்பான குற்றச்சாட்டு விசாரணை மற்றும் ஜாமீன் மறுஆய்வு நீதிமன்றத்தில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.
