யாரும் ஏமாறாதீர்கள்!… இன்ஸ்டாவில் காதல் வலை… ரூ.4.5 லட்சம் அபேஸ்… எஸ்கேப் ஆன காதலன்… பல பெண்களை ஏமாற்றிய பகீர் பின்னணி…!!

By Gayathri on கார்த்திகை 18, 2026

Spread the love

ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான நந்தினி, விவாகரத்துக்குப் பின் தனது மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வலைத்தளம் வழியாக கோகுல் என்பவருடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், தனது அவசரக் கடன் தேவைக்காகப் பணம் கேட்ட கோகுலுக்கு, நந்தினி தனிநபர் கடன் பெற்று ரூ.2.54 லட்சத்தையும், சிறுக சிறுக மேலும் ரூ.2 லட்சத்தையும் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தவணை முறையில் விலை உயர்ந்த ஐபோன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்த நிலையில், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி சென்னையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்குப் பின் ஈரோடு திரும்பிய கோகுல், சொந்த ஊர் பிரச்சினை எனக் கூறிச் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. சந்தேகமடைந்த நந்தினி விசாரித்தபோது, கோகுல் ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் வசித்து வருவதும், விவாகரத்தான அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களைக் குறிவைத்து இதேபோல் ஏமாற்றிப் பணம் பறிப்பதும் தெரியவந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ரோஹினி என்ற பெண்ணும் இவரால் பாதிக்கப்பட்டிருப்பதை நந்தினி அறிந்துள்ளார். தான் வாங்கிய வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நந்தினி தொடர்ந்து வற்புறுத்தியதால், கோகுல் தரப்பில் ரூ.1.50 லட்சம் மட்டும் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது.

   

மீதமுள்ள கடன் தொகை மற்றும் அபராதப் பணத்தைக் கேட்டபோது, கோகுல் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஆள் வைத்துக் கடத்திக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த நந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், இந்த மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீக்குமாறு கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் வெவ்வேறு எண்களில் இருந்து மிரட்டல் விடுப்பதால், இழந்த பணத்தை மீட்டுத் தந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நந்தினி கோரிக்கை விடுத்துள்ளார்.