திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு ஆட்டுப்பட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிய நிலையில் மாயமானார். மறுநாள் காலையில் அப்பகுதியில் உள்ள ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் கொடூரமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இச்சம்பவம் நடந்து 75 நாட்களைக் கடந்த நிலையிலும், 3 தனிப்படைகள் அமைத்துத் தேடி வருதாகக் கூறும் காவல்துறை இதுவரை ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்யவில்லை. “எனது மனைவியைக் கொன்றவர்களைப் பிடிக்காமல், என் மீதே சந்தேகப்பட்டு டி.என்.ஏ சோதனை வரை எடுத்து வேதனைப்படுத்தினர். அம்மா எங்கே என்று கேட்கும் இரு பிள்ளைகளுக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தினமும் செத்துக் கொண்டிருக்கிறேன்” என நந்தகுமார் கண்ணீருடன் கதறியுள்ளார். குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாகச் சுற்றி திரிவதால், கிராமப் பெண்கள் இரவு நேரத்தில் வெளியே வர அஞ்சிப் பீதியில் உறைந்துள்ளனர்.
