பீகார் மாநிலத்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கிப் பெரும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் பள்ளி குழந்தைகள் தங்களது உயிரைப் பணயம் வைத்து படகில் பள்ளிக்குச் சென்றபோது நேர்ந்த பயங்கரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீருடையுடன் புத்தகப் பைகளைச் சுமந்து கொண்டு படகில் பள்ளிக்குச் சென்ற சிறுவர்கள், கரைக்கு அருகே வந்தடைந்த நொடியில் எதிர்பாராதவிதமாகப் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த குழந்தைகள் அனைவரும் ஆழமான வெள்ள நீரில் தூக்கி வீசப்பட்டு மூழ்கத் தொடங்கினர்.
படிக்கச் சென்ற இடத்தில் உயிருக்குப் போராடிய பிஞ்சுக் குழந்தைகள், தங்களுக்குத் தெரிந்த நீச்சல் கலையைக் கொண்டும், சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து கிராம மக்களின் உதவியோடும் அதிர்ஷ்டவசமாக நீந்தி உயிர்தப்பினர். “ஆண்டுதோறும் வெள்ளம் வந்தாலும் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசு எந்த உரிய ஏற்பாடும் செய்வதில்லை” எனப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
