மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் நஸ்ராபூர் கிராமத்தில், 3 வயது சிறுமி ஒருவர் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த புனே மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சலுங்கே, குற்றவாளியான 65 வயது பீம்ராவ் காம்ப்ளேவுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார். இக்கொடூரமான குற்றம் நீதித்துறையின் மனசாட்சியை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையுமே உலுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இதனை “அரிதிலும் அரிதான வழக்கு” என வகைப்படுத்தி இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
விசாரணையின்படி, குற்றவாளி பீம்ராவ் காம்ப்ளே அச்சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவதாகவும், கன்றுக்குட்டியை காட்டுவதாகவும் ஆசை வார்த்தை கூறி மாட்டு கொட்டகைக்கு அழைத்துச் சென்று இந்த வக்கிர செயலில் ஈடுபட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவருக்கு, ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு இருந்ததால் தன் செயலின் சட்ட விளைவுகளை அவர் நன்கு அறிந்திருந்தார் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குற்றவாளியின் தரப்பில் ஆயுள் தண்டனை கோரப்பட்ட போதிலும், சிறுமியின் பிஞ்சு வயது, தாக்குதலின் கொடூரம், குற்றவாளியின் முந்தைய குற்றப் பின்னணி மற்றும் அவரிடம் எந்தவித மனவருத்தமும் இல்லாத நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு மரண தண்டனை மட்டுமே பொருத்தமானது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் காவல்துறை இரவும் பகலும் துரிதமாகச் செயல்பட்டு, வெறும் 15 நாட்களிலேயே 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, 55 சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த விரைவான மற்றும் உணர்வுப்பூர்வமான விசாரணையின் பலனாகக் கிடைத்த மரண தண்டனை தீர்ப்பை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மனதார வரவேற்றுள்ளார். இதுபோன்ற குற்றவாளிகளுக்குச் சமூகத்தில் இடமில்லை என்று குறிப்பிட்ட அவர், நீதியை நிலைநாட்டிய நீதித்துறைக்கும், விரைந்து செயல்பட்டு ஆதாரங்களைச் சேகரித்த காவல்துறை, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
