ஷாக் நியூஸ்… ஆவின் பாலில் இனி தள்ளுபடி கிடையாது… தமிழக அரசின் திடீர் முடிவால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி…!

By Visaka on ஆனி 29, 2026

Spread the love

கோவை மாவட்டத்தில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கான ரூ.2 தள்ளுபடியை ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இனி வரும் நாட்களில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கும் பால் பாக்கெட்டுகள் அதிகபட்ச சில்லறை விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் மாதாந்திர பால் அட்டைகளை பிரதி மாதம் 11 முதல் 25-ஆம் தேதிக்குள் செயலி பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், முகவர்களுக்கான விநியோக முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு, இனி பால் பாக்கெட் அடிப்படையில் இல்லாமல் பெட்டி அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும், முகவர்கள் தங்களின் கமிஷன் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிப் பணத்தைச் செலுத்தும் புதிய முறை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கோவை ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது குறித்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி நிறுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மாதந்தோறும் இந்தச் சலுகையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும். மக்களின் அத்தியாவசியத் தேவையான பாலில் கூட இப்படிப்பட்ட சலுகையைப் பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் நலனைக் கருதி மாதாந்திர அட்டைதாரர்களுக்கான பழைய தள்ளுபடி நடைமுறையையே ஆவின் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு சென்னையில் 3 ரூபாயும், பிற மாவட்டங்களில் 2 ரூபாயும் தள்ளுபடி விலையில் பால் வழங்கப்பட்டு வந்தது. ஏழை, எளிய மக்களின் அன்றாடப் பால் தேவையை ஓரளவாவது மலிவான விலையில் பூர்த்தி செய்யப் பயன்பட்டு வந்த இந்தச் சலுகை, பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திடீரென நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தற்போதைய சூழலில், ஆவின் நிறுவனத்தின் இந்த தள்ளுபடி ரத்து நடவடிக்கை நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பதம் பார்க்கும் என்பதால், இந்த முடிவை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.