கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்பவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், மல்லிகைபாய் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு கர்நாடகாவில் வாழ்ந்து வந்த நிலையில், சுஷ்மிதாவிற்கு வேறொரு ஆணுடன் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவை ராஜேஷ் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சுஷ்மிதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தன் குழந்தையுடன் கோபித்துக்கொண்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரிந்து சென்ற தன் மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வருவதற்காக, ராஜேஷ் தனது பெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் சுமார் 30 பேருடன் சுஷ்மிதாவின் தாய் வீட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே சுஷ்மிதாவின் கள்ளத்தொடர்பு குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சுஷ்மிதாவின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
கத்திகுத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சுஷ்மிதாவை உறவினர்கள் மீட்டு அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீசார் சுஷ்மிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தப்பியோடிய கணவன் ராஜேஷ் கர்நாடக மாநிலம் கோடள்ளி காவல் நிலையத்தில் போலீசாரிடம் சரணடைந்தார். குடும்பப் பிரச்சினையை பேசித் தீர்க்க வந்த இடத்தில் மனைவியைக் கணவனே குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
