பிரேசிலின் சபெகோ நகரில் உள்ள எஃபாபி பகுதியில், விளையாட்டாகச் சுடப்பட்ட துப்பாக்கி தோட்டா பாய்ந்து 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். வீட்டில் படுக்கையறை அலமாரியில் இருந்த தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்த மற்றொரு சிறுவன், அதிலிருந்த தோட்டா பகுதியை அகற்றிவிட்டதால் ஆபத்தில்லை என தவறாக நினைத்துள்ளான். ஜன்னல் அருகே நின்றிருந்த நண்பனை வேடிக்கையாக மிரட்ட முயன்றபோது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கியில் எஞ்சியிருந்த தோட்டா வெடித்து நண்பனின் கண்ணுக்கு மேல் பாய்ந்து தலைவழியாக வெளியேறியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அச்சிறுவன் ஹெலிகாப்டர் மூலம் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
துப்பாக்கிச் சூட்டுக்குப்பின் குற்ற உணர்ச்சியில் சிறுவன் அத்துப்பாக்கியைப் போர்வையின் கீழ் மறைத்து வைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த மற்றொரு துப்பாக்கியையும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். சிறுவர்கள் எளிதில் எடுக்கும் வகையில் ஆயுதங்களைப் பாதுகாப்பற்ற முறையில் அலமாரியில் வைத்திருந்ததால், பண்ணை வீட்டில் இருந்த அச்சிறுவனின் 52 வயது தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கவனக்குறைவாகச் செயல்பட்ட காரணத்திற்காகத் தந்தையையும், துப்பாக்கியைப் பயன்படுத்திய அவரது மகனையும் காவல்துறையினர் விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
