இன்ஸ்டாகிராமில் “நண்பர்களே” என்ற வார்த்தையால் பரிச்சயமாகி பிரபலமானவர் வீரமணி. இவர் சமீபத்தில் கேரளா சுற்றுலா செல்வதற்காக தனது பின்தொடர்பவர்களிடம் கியூஆர் கோடு மூலம் நிதி உதவி கேட்டுப் பெற்ற தொகையைக் கொண்டு உல்லாசமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனைக் கொண்டாடிய அவர், தனது அடுத்த கட்டமாகப் பொதுவெளியில் தனது வீட்டு முகவரியைப் பகிர்ந்து ஸ்வீட் மற்றும் பரிசுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த விளையாட்டுத் தனமான வேண்டுகோள், சமூக வலைதளப் பயனாளிகளுக்கு அவர் மீதான ஒரு சவாலாகவும் சேட்டையாகவும் மாறியது.
இதன் விளைவாக, அமேசான், செப்டோ மற்றும் பிளிப்கார்டு போன்ற தளங்கள் வழியாக கேஷ் ஆன் டெலிவரி முறையில் டிவி, குளிர்சாதனப் பெட்டி என லட்சக்கணக்கிலான மதிப்பிலான பொருட்கள் வீரமணியின் வீட்டு முகவரிக்கு இடைவிடாமல் குவியத் தொடங்கின. பீரங்கி போன்ற விசித்திரமான பொருட்களைக்கூட அவரது வீட்டிற்கு ஆர்டர் செய்ததுபோல எடிட் செய்து நெட்டிசன்கள் அவரைத் தொடர்ந்து வம்பிழுத்தனர். ஒரே வாரத்தில் 500-க்கும் மேற்பட்ட தேவையற்ற ஆர்டர்கள் வீடு தேடி வந்ததால், விநியோகஸ்தர்களின் தொல்லை எல்லை மீறியதுடன் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகினார்.
இந்த கடுமையான தொல்லைகளைச் சமாளிக்க முடியாமல் செய்வதறியாது திகைத்த வீரமணி, இறுதியில் தனது வீட்டை விட்டே வேறு இடத்திற்கு வெளியேற நேரிட்டதாகக் கூறி ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் கிடைக்கும் புகழைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டு, விளையாட்டாக முகவரியைப் பகிர்ந்துகொண்டதால் ஏற்பட்ட இந்த விபரீதம் இணையத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
