“சோறு திங்கிறியா இல்ல..” கோவிலில் பக்தர்களை அசிங்கமாக திட்டிய அமைச்சர் சேகர்பாபு… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

By Soundarya on தை 3, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவில் மார்கழித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தனர். அப்போது அங்கிருந்த சில இந்து அமைப்பினர், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் “வீரசவர்க்கருக்கு ஜே” எனத் தொடர்ந்து கோஷமிட்டனர். கோவில் திருவிழாவில் இத்தகைய அரசியல் கோஷங்கள் எழுப்பப்பட்டது அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியது. 

இதனால் கடும் கோபமடைந்த அமைச்சர் சேகர்பாபு, கோஷமிட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த ஆவேசத்தில் அங்கிருந்தவர்களைப் பார்த்து “சோறு திங்கிறியா இல்ல..” என ஒருமையில் கேள்வி எழுப்பினார். அமைச்சரின் இந்தப் பேச்சு மற்றும் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் போக்கால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் அமைச்சரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தற்போது சவர்க்கருக்கு ஆதரவாகக் கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.