தெலங்கானா மாநிலம் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில், 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் கடத்தி, போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமான நபர்களுடன் தொடர்பிலிருந்த அந்த மாணவியை, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி போல்லாரம் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரைச் சந்தித்த நபர்கள், மயக்க மருந்து கொடுத்து காரிலும், துலாப்பள்ளியில் உள்ள விடுதி அறையிலும் வைத்து அடுத்தடுத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தப்பித்து மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்த அந்தச் சிறுமியை மீண்டும் பிடித்து, போதைப்பொருள் கொடுத்து ரயிலிலும் ஆட்டோவிலும் வைத்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவழியாக அந்த கும்பலிடமிருந்து தப்பித்து வீடு திரும்பிய மாணவி, குடும்பத்தினரின் உதவியுடன் அல்வால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை, குற்றத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் மீதும் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. மேலும், உரிய அடையாளச் சரிபார்ப்பு இன்றி சிறுமிக்கு அறை வழங்கிய விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
