மும்பை அருகே உள்ள விரார் கிழக்கு, கார்டி பகுதியில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாகக் கல் குவாரி செயல்பட்டு வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வசாய் வட்டாட்சியர் தீபக் கெய்க்வாட் வழிகாட்டுதலின்படி, வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியரின் எந்தவித அனுமதியும் இன்றி பாறைகளை உடைத்துச் சட்டவிரோதமாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சோதனையின் போது 8 பிராஸ் கற்கள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த 2 ஹைவா லாரிகள் மற்றும் பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட போக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட எந்திரங்கள் மற்றும் கனிமங்களின் மொத்த மதிப்பு ரூ.90.89 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் ராமச்சந்திர நாராயண் பாட்டீல், மகேஷ் ஹரேஷ்வர் பாட்டீல் மற்றும் பரேஷ் பாட்டீல் ஆகிய 3 பேர் மீது மாண்டவி போலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
