கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் பகுதியில் சாமுண்டீஸ்வரி (70) என்ற மூதாட்டி தனியாகக் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் பாரூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் (30) என்பவர் அதிகாலையில் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. சம்பவத்திற்குப் பின் தலைமறைவான அவரைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருந்த சூரியகுமாரை தனிப்படை போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர்.
விசாரணையில், மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் சத்தம் போடாமல் இருக்க வாயை அழுத்தியதில் உயிரிழந்ததாகவும் சூரியகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைப் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
