கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி ஜோதி நகர் சி காலனி பகுதியில் அமைந்துள்ள பொதுக் கழிப்பறையில், கடந்த நவம்பர் 1 அன்று அடைப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் அகற்றும் வாகனம் வரவழைக்கப்பட்டு அடைப்பைச் சரி செய்யும் பணி நடைபெற்றபோது, கழிவுநீருடன் சுமார் 7 மாத வளர்ச்சியடைந்த ஆண் சிசுவின் சடலம் வெளியே வந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கழிப்பறை பராமரிப்பாளர் சித்ரா, உடனடியாக சூளேஸ்வரன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமிக்குத் தகவல் தெரிவித்தார். இதனடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொள்ளாச்சி கிழக்குக் காவல் துறையினர், கழிவுநீர் கால்வாயில் கிடந்த சிசுவின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுக் கழிப்பறையில் சிசுவின் சடலத்தை வீசிச் சென்றது யார்? இது சட்டவிரோதக் கருக்கலைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்துப் பொள்ளாச்சி கிழக்குக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
