தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைமையிலான புதிய அமைச்சரவையில் சென்னை மாவட்டத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், வெங்கடராமன், ராஜ்மோகன் ஆகிய 5 பேர் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், தற்போது தலைநகரின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரிய வில்சன் மற்றும் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமார் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த புதிய சேர்க்கையின் மூலம் த.வெ.க அமைச்சரவையில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து, தலைநகரில் கட்சியின் பிடி மேலும் வலுவடைந்துள்ளது.
