விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமிபுரம் இமானுவேல் முடக்கித் தெருவில் விராச்சாமி மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு கோடீஸ்வரன் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். இவர் எல்கேஜி படித்து வரும் நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் தீரென்று வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமடைந்துள்ளான். உடனே சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே விளையாடிய போது கீழே கிடந்த ஒரு பாட்டிலில் இருந்த குளிர்பானத்தை குழந்தை குடித்ததாகவும், பிறகு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
