அஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படக் கதையை விஞ்சும் வகையில், கோவாவிலிருந்து மகாராஷ்டிராவுக்குச் சென்ற இரண்டு கன்டெய்னர்களில் இருந்த ரூ.400 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தற்போது இந்தியாவையே அதிரவைத்துள்ளது. கடந்த 2025 அக்டோபரில் நிகழ்ந்த இந்தக் கொள்ளை சம்பவம், பல மாதங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது இந்திய குற்றவியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய பணக் கொள்ளைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தத் துணிகரச் சம்பவம் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சோர்லா காட் என்ற அடர்ந்த வனப்பகுதியில் அரங்கேறியுள்ளது. ஆபத்தான மலைப்பாதையில் கன்டெய்னர்கள் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் இதனைத் திட்டமிட்டு கடத்தியுள்ளது. இந்தக் கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட பணம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கிஷோர் ஷேட்டுக்குச் சொந்தமானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை எதற்காக ரகசியமாகக் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்துப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
நாசிக்கைச் சேர்ந்த சந்தீப் பாட்டீல் என்பவர் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட பிறகே இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்டுத் தரும்படி மர்ம கும்பல் அவரைச் சிறை வைத்துத் தாக்கியுள்ளது. அவரை சுமார் ஒன்றரை மாதங்கள் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, “கன்டெய்னர் கடத்தலுக்கு நீ தான் காரணம்” என குற்றம் சாட்டி, ரூ.400 கோடி பணத்தை ஒப்படைக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து என மிரட்டியுள்ளனர். பின்னர் தப்பித்த சந்தீப் பாட்டீல், 2026 ஜனவரி 1 அன்று நாசிக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் மூலம் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது
. அவர்களிடமிருந்து தப்பி வந்த சந்தீப், 2026 ஜனவரி 1 அன்று அளித்த புகாரைத் தொடர்ந்து, மூன்று மாநில காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தகவல்கள் மிகவும் தாமதமாக வெளியானதால், குற்றவாளிகளைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. வழக்கின் தீவிரத்தன்மை கருதி, மகாராஷ்டிர அரசு இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) விசாரணைக்கு மாற்றியுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கோவா மாநில காவல்துறையினர் ஒருங்கிணைந்து தொழில்நுட்ப மற்றும் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் காடுகளுக்குள் நடந்த இந்த மெகா கொள்ளை சம்பவம், பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள ஓட்டைகளை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதுடன், நாட்டின் மிகப்பெரிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
