“அன்புமணி ஓகே.. ராமதாஸ் எப்போது..?” இபிஎஸ்-டம் ஒப்படைக்கப்பட்ட அசைன்மென்ட்.. பாமக வாக்கு வங்கியை குறிவைத்து பாஜக போடும் ஸ்கெட்ச்…!!

By Soundarya on தை 25, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாமக-வை முழுமையாக இணைக்க டெல்லி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஜனவரி 7, 2026 அன்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தனது ஆதரவை உறுதி செய்தாலும், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக மேடையேறாதது பாஜக-வினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாமக-வின் முழுமையான வாக்கு வங்கியைப் பெற ராமதாஸின் நேரடி பங்கேற்பு அவசியம் என நம்பும் டெல்லி பாஜக, அவரைச் சம்மதிக்க வைக்கும் பொறுப்பை இபிஎஸ்-இடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மூலம் பாஜக தலைமை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில், ராமதாஸ் தரப்பு மிகக் கறாரான நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது. அன்புமணி தலைமையிலான அணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு இணையான எண்ணிக்கையில் இடங்கள் வேண்டும் அல்லது ராமதாஸை முன்னிறுத்தியே பிரசார வியூகங்கள் அமைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமதாஸை இழுக்க பாஜக தனது தூதரைத் தைலாபுரம் அனுப்பிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது அவர் மேடையேறுவாரா என்பது உறுதியாகத் தெரியவரும்.