“அம்மா நான் உள்ளே இருக்கேன்”…. காரில் பூட்டிக்கொண்ட பஞ்சாயத்து தலைவரின் மகள் பரிதாப சாவு…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!

By Nanthini on புரட்டாதி 21, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டம், ஜூலூருபாடு மண்டலத்திற்குட்பட்ட வினோபா நகர் கிராமத்தில், நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு தற்செயலாகப் பூட்டிக்கொண்டதால் உள்ளே சிக்கிய 4 வயதுச் சிறுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். வினோபா நகர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் (சர்பஞ்ச்) கங்காவத் நவீன் என்பவரின் மகள் தான்விஸ்ரீ என்பவரே இந்தத் துயரச் சம்பவத்தில் பலியான சிறுமியாவார். வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்து உள்ளே சென்றதை யாரும் கவனிக்காத நிலையில், கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டார்.

விளையாடச் சென்ற குழந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, காரின் முன் இருக்கைகளுக்கு இடையே சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதை அப்பகுதியினர் கண்டறிந்தனர். உடனடியாகக் காரின் கண்ணாடிகளை உடைத்துச் சிறுமியை மீட்ட குடும்பத்தினர், சிகிச்சைக்காகக் கொத்தகூடெம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காரின் கதவுகள் பூட்டப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே உயிரிழப்புக்குக் காரணம் எனப் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளைத் தனியாக விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும், காரைப் பூட்டுவதற்கு முன்பாக உள்ளே குழந்தைகள் யாரேனும் இருக்கிறார்களா என்பதைப் பெற்றோர் மற்றும் வாகன ஓட்டிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. ஏற்கனவே தெலங்கானாவின் நல்கொண்டா மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களிலும் இதுபோன்று காருக்குள் சிக்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு குழந்தை உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.